வங்கி கணக்கில் ரூ.10.96 லட்சம் ‘அபேஸ்’ சைபர் கிரைம் போலீசார் விசாரணை

கரூர்: கரூர் அருகே, வங்கி ஏ.டி.எம்., கார்டு எண் மற்றும் ஓ.டி.பி., நம்பரை பயன்படுத்தி, முதியவரின் வங்கி கணக்கில் இருந்து, ரூ.10.96 லட்சத்தை அபேஸ் செய்த, மர்ம நபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை காவேரி நகரை சேர்ந்தவர் ராமசாமி, 71. இவருடைய மொபைல் எண்ணை கடந்த, 9ல் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, ஏ.டி.எம்., கார்டு லாக் ஆகி விட்டதால், அதை சரி செய்ய ஏ.டி.எம்., கார்டு எண் மற்றும் ஓ.டி.பி., நம்பரை கேட்டுள்ளனர்.

அதை உண்மை என நம்பிய ராமசாமி, ஏ.டி. எம்., கார்டு எண் மற்றும் ஓ.டி.பி., நம்பரை தெரிவித்துள்ளார். இதையடுத்து, ராமசாமியின் சேமிப்பு கணக்கில் இருந்த, 10 லட்சத்து, 96 ஆயிரத்து, 90 ரூபாயை மர்ம நபர்கள் அபேஸ் செய்து விட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த ராமசாமி அளித்த புகாரின்படி, கரூர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement