தொகுதி மறுவரை மசோதாவை நிறைவேற்ற பார்லி சிறப்பு கூட்டம்? இம்மாத இறுதியில் நடத்த மத்திய அரசு திட்டம்

- சிறப்பு நிருபர் -

லோக்சபா, மாநில சட்டசபைகளில், மகளிருக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், 2023ல், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை தேஜ கூட்டணி அரசு நிறைவேற்றியது. 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகியவற்றுக்கு பின்னரே, இந்த சட்டத்தை அமல்படுத்த முடியும்.

இந்த சூழலில், 2029 லோக்சபா தேர்தலுக்குள் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யவும் முடிவு செய்தது. தொகுதி மறுவரையறை முன்னெடுக்க, அரசியலமைப்பு 131வது சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு லோக்சபா, ராஜ்யசபாவில் மூன்றில் இரு பங்கு ஆதரவு பெறுவது கட்டாயம். மசோதாவுக்கு காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

தொகுதி மறுவரையறை மசோதா, ஏப்ரலில் லோக்சபாவில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. விவாதத்தின் முடிவில், மூன்றில் இரு பங்கு ஆதரவு கிடைக்காததால் மசோதா தோல்வி அடைந்தது. ஜூலை, ஆகஸ்டில் நடந்த மழைக்கால கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் கொண்டு வரப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் நடக்கவில்லை.

அதே சமயம், ஆக., 13 உடன் முடிந்த அந்த கூட்டத்தொடர், இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒத்திவைக்கவில்லை. போதுமான எண்ணிக்கை திரட்டி, இந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றவே, சபைகளை மத்திய அரசு ஒத்திவைக்கவில்லை என, கூறப்படுகிறது.

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற முயற்சியில் மத்திய அரசு மீண்டும் இறங்கியது. இம்மாத இறுதியில் பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் நடக்கவுள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மசோதாவுக்கு தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தேவையான 'மேஜிக்' எண்கள்



லோக்சபாவில், 543 எம்பிக்கள் உள்ளனர்; மூன்று இடங்கள் காலியாக உள்ளன. சபையில், தேஜ கூட்டணிக்கு, 318 எம்.பி.,க்கள் உள்ளனர். மசோதாவை நிறைவேற்ற, மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை அதாவது, 360 ஓட்டுகள் தேவை. 22 திமுக - எம்பிக்கள் ஆதரித்தால், ஆதரவு, 340 எம்பிக்களாக உயரும். இதனால், பாஜவுக்கு இன்னும், 20 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ராஜ்யசபாவில் மொத்தமுள்ள, 245 இடங்களில், மூன்று இடங்கள் காலியாக உள்ளன. 240 பேரில் தேஜ கூட்டணிக்கு, 153 எம்பிக்கள் உள்ளனர். மசோதாவை நிறைவேற்ற, 162 எம்பிக்கள் தேவை. இதனால், பாஜவுக்கு சிறிய கட்சிகளைச் சேர்ந்த, 9 எம்பிக்கள் தேவைப்படுகின்றனர்.

தி.மு.க., ஆதரவு உறுதி?



தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக, திமுகவுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு திமுக சம்மதம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

Advertisement