சிட்டி கிரைம்

பேராசிரியையை தாக்கி 7 சவரன் செயின் பறிப்பு

குன்றத்துார்: சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சோனா, 35; தனியார் கல்லுாரி பேராசிரியை. நேற்று மாலை 6:30 மணி அளவில் மணிமங்கலம் – நடுவீரப்பட்டு சாலையில் உள்ள தனியார் கல்லுாரி அருகே ஸ்கூட்டர் ஓட்டிச்சென்றார். அப்போது, அவரை வழிமறித்த மர்ம நபர்கள் சோனாவின் முகத்தில் தாக்கி, அவரது 7 சவரன் செயினை பறித்து தப்பி சென்றனர். இதில் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டது. சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கொதிக்கும் எண்ணெய் ஊற்றி இருவர் காயம்

புளியந்தோப்பு: பட்டாளம் டிம்லர்ஸ் சாலை பகுதியில் பிரியாணி கடை வைத்துள்ளவர் வேலு. நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் கடையில் வந்த 17 வயது சிறுவன், ‘ஆர்டர்’ செய்துவிட்டு, தன் பைக்கில் அமர்ந்து, திடீரென ஆக்சிலேட்டரில் கை வைத்து இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஹோட்டலில் இருந்த கொதிக்கும் எண்ணெய் மீது வாகனம் மோதி, கடை உரிமையாளர் வேலுவின் மகள் ஷாலினி, 35 மற்றும் கடையில் இருந்த பஷீர், 26, ஆகியோர் மீது பட்டு, பலத்த காயம் அடைந்தனர். இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

‘கிரிக்கெட் ஸ்டெம்ப்’பால் இருவருக்கு தாக்குதல்

கே.கே.நகர்: கே.கே.நகர், 12வது தெருவைச் சேர்ந்தவர் நிர்மல்குமார், 27. கடந்த 13ம் தேதி இரவு, நண்பர் பசுபதியுடன் கே.கே.நகர் பொன்னம்பலம் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், நிர்மல்குமார் மீது மோதுவதுபோல் வாகனத்தை ஓட்டிச் சென்று, அவரை ஆபாசமாகப் பேசினர். இதை, நிர்மல் குமாரும் பசுபதியும் தட்டிக்கெட்டுள்ளனர். ஆத்திரமடைந்த இருவரும், கிரிக்கெட் ஸ்டெம்ப்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். விசாரித்த கே.கே.நகர் போலீசார், போரூரைச் சேர்ந்த நரேன், 25, கே.கே.நகரைச் சேர்ந்த கமலேஷ், 26, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

மளிகைக்கடையில் திருடிய 4 பேர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூர், பாலகிருஷ்ணா நகர் பிரதான சாலையில் மளிகைக்கடை நடத்தி வருபவர் ரகுநாதன், 44. கடந்த 11ம் தேதி இரவு, இவரது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு 29 ஆயிரம் ரூபாய் திருடு போனது. விசாரித்த சாத்தாங்காடு போலீசார், தஞ்சாவூரில் பதுங்கி இருந்த திருடர்களான தண்டையார்பேட்டையைச் சேர்ந்த லோகேஷ், 19, ஜோஸ்வா, 18, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.

பெண் போலீசிடம் தகராறு செய்தவருக்கு ‘காப்பு’

வியாசர்பாடி: ஆயுதப்படையில் பணிபுரியும் 25 வயது பெண் காவலர், நேற்று வியாசர்பாடியில் முதல்வர் வருகைக்காக பாதுகாப்பு பணியில் இருந்தார். வியாசர்பாடி, அசோக்பில்லர் அருகே முதல்வர் கான்வாய் வந்தபோது, வாலிபர் ஒருவர் நடுரோட்டில் நின்று வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அவரை அங்கிருந்து செல்லுமாறு, அப்பெண் காவலர் கூறியுள்ளார். அதற்கு அந்த வாலிபர், பெண் காவலரை தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டார். விசாரித்த போலீசார், வியாசர்பாடியைச் சேர்ந்த சதீஷ், 25 என்ற வாலிபரை, நேற்று கைது செய்தனர்.

Advertisement