ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்து குதறியதில் கன்றுக்குட்டி பலி
ராசிபுரம்:ராசிபுரத்தில், வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த இளங்கன்று குட்டியை தெருநாய்கள் கடித்து குதறியதில் கன்றுக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது.
ராசிபுரம், 17வது வார்டுக்குட்பட்ட வரதன் தெருவை சேர்ந்தவர் பார்வதி, 53. இவர், வீட்டின் பின்பகுதியில் பசுங்கன்றுகுட்டியை கட்டி வைத்திருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த, ஐந்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாக ஒன்று சேர்ந்து வீட்டின் கொல்லைப்புறத்திற்குள், நேற்று அதிகாலை சென்றன. அங்கு கட்டப்பட்டிருந்த இளங்கன்றுக்குட்டியை அந்த நாய்கள் சூழ்ந்துகொண்டு சரமாரியாக கடித்து குதறின. இதில், கன்றுக்குட்டியின் வயிற்றுப்பகுதி பலத்த சேதமடைந்து குடல் சரிந்து உயிரிழந்தது. இதைக்கண்ட பார்வதி அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'வரதன் தெரு பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருவில் சுற்றித்திரியும் தெருநாய்கள், ஏற்கனவே ஆடு, கோழி, வாத்துகளை கடித்து வேட்டையாடிவிட்டது. தற்போது, கன்றுக்குட்டியையும் கொடூரமாக கடித்து கொன்றுவிட்டது. தெருவில் விளையாடும் குழந்தைகளை மட்டுமே இன்னும் இந்த நாய்கள் கடிக்கவில்லை. நாய்களின் நடமாட்டத்தால் குழந்தைகளை தனியாக வெளியே அனுப்பவே பெற்றோர் பயப்படுகின்றனர். குழந்தைகள் மற்றும் பொதுமக்களை நாய்கள் கடிப்பதற்கு முன்பாக, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.