4 நாள் தொடர் விடுமுறையால் பஸ் ஸ்டாண்டில் குவிந்த மக்கள்

நாமக்கல்:ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை வரும், 19, 20ல் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, பள்ளி, கல்லுாரிகளுக்கு, இன்று முதல், வரும், 20 வரை, நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் என அனைவரும், தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

அதற்காக, நாமக்கல் மாவட்டத்தில், 55 சிறப்பு பஸ்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில், 40 தனியார் பஸ்கள் என, மொத்தம், 95 பஸ்கள இயக்கப்படுகிறது.

குறிப்பாக, நாமக்கல் - சென்னை, 15, சேலம் - நாமக்கல் - திருச்சி, 25, நாமக்கல் - துறையூர் - ஈரோடு, 15 என, மொத்தம், 55 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பள்ளி, கல்லுாரி விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்த, நேற்று, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், தங்கள் ஊருக்கு செல்லும் பஸ்களில் இடம் பிடிக்க, பயணிகள் முண்டியடித்துக்கொண்டு செல்வதை காணமுடிந்தது.

மேலும், பலர் தங்கள் ஊருக்கு செல்வதற்கான பஸ் வரும் வரை காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது. நாமக்கல்லில் இருந்து சேலம், திருச்சி, கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில், கூட்டம் நிரம்பி வழிந்தது. பஸ்சிற்குள் நின்றும் கொண்டும், படியில் தொங்கியபடியும் பயணிகள் சென்றனர்.

Advertisement