மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வரும்: ஸ்டாலின் ஆவேசம்

36

சென்னை: 'அறிவு செயல்பாடுகளுக்கு எந்த தொடர்புமற்ற, அறிவார்ந்த சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: தி.மு.க., ஆட்சியில், கோவை மக்கள் மற்றும் இளைய தலைமுறையினரின் அறிவுத் தாகத்தை துாண்டும் விதமாக, ஒரு மாபெரும் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என, அறிவித்தோம். கோவை மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடித்தோம்.

இப்படி நாம் விரைந்து செயல்பட்டு, அக்கறையோடு உருவாக்கியுள்ள அறிவு கோவிலில், அறிவியல் மையம் மற்றும், 'டிஜிட்டல்' நுாலகம் அமைத்துள்ளோம். ஒரு லட்சத்து, 25 ஆயிரம் நுால்களை கொண்ட மேற்கு மண்டலத்துக்கான மாபெரும் அறிவு சுரங்கமாக இது திகழ்கிறது. அதை யார் திறந்தால் என்ன, திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவது தானே உண்மையான பெருமை.

தமிழகத்தில் அந்த பெருமை, ஆக்க சக்தியான தி.மு.க.,வுக்கே உரியது. கோவை மட்டுமல்ல, திருச்சியில், 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காமராஜர் பெயரில் பிரம்மாண்ட நுாலகம், திருநெல்வேலியில், 100 கோடி ரூபாயில் காயிதே மில்லத் நுாலகம், சேலத்தில், 104 கோடி ரூபாயில் பாரதிதாசன் அறிவுலகம், கடலுாரில் அஞ்சலை அம்மாள் அறிவுலகம் என, தி.மு.க., ஆட்சியில் அமைத்து வந்தோம்.

கோவை அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில், பிரமிடு வடிவலான கணினி மேஜையில் பொறிக்கப்பட்டுள்ள, 'நான் முதல்வன்' என்ற பெயரை மறைத்து வைத்துள்ளனர். தான் முதல்வராகிட்ட பிறகும் கூட, முதல்வன் என்ற சொல்லை கண்டால், மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவு தான் வரும் என, நம் எதிரிகளே அஞ்சுகின்றனர்; அதுதான் நமது வெற்றி.

அறிவு செயல்பாடுகளுக்கு எந்தத் தொடர்புமற்ற, அறிவார்ந்த சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட, இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும். அதை நிறைவேற்றுவதில், நாம் அமைத்த நுாலகங்களும், வெளியிட்ட நுால்களும் நிச்சயம் பங்களிக்கும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement