தமிழகத்தை சேர்ந்தவரை மணந்ததால் புதுச்சேரியில் இருப்பிட சான்றிதழ் மறுப்பு தாசில்தார் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்
சென்னை: ‘வெளிமாநிலத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு, அங்கேயே வசிக்கிறார் என்ற காரணத்தின் அடிப்படையில், புதுச்சேரியை சேர்ந்த மருத்துவ பட்டதாரி பெண்ணுக்கு, இருப்பிட சான்று வழங்க மறுக்க முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கலையரசி. எம்.பி.பி.எஸ்., பட்டதாரியான இவர், முதுகலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க, இருப்பிட சான்று கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.
ஆனால், கலையரசி திருமணமாகி, கணவருடன் தமிழகத்தில் வசித்து வருவதால், அவர் புதுச்சேரியில் வசிப்பவர் அல்ல என்று கூறி, சான்று கோரிய விண்ணப்பத்தை, தாசில்தார் நிராகரித்தார். இருப்பிட சான்று கோரிய மேல்முறையீடு மனுவும், துணை கலெக்டரால் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், கலையரசி வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதி கே.சுரேந்தர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.ரவி, புதுச்சேரி அரசு பிளீடர் ஜெ.குமரன் மற்றும் அட்சயா ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
புதுச்சேரி மருத்துவ கல்லுாரியில், மனுதாரர் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்று, தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவரை, 2024ல் திருமணம் செய்துள்ளார். புதுச்சேரியில் மருத்துவ பட்ட மேற்படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, இருப்பிட சான்று கோரிய மேல்முறையீடு மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி அரசின், 2003ம் ஆண்டு வழிகாட்டுதல்கள்படி, விண்ணப்பதாரரோ அல்லது அவரது பெற்றோரோ விண்ணப்பிக்கும் தேதிக்கு முன், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து, புதுச்சேரியில் வசித்து வந்திருந்தால், அது இருப்பிட சான்றிதழ் பெறுவதற்கான தகுதியாகும். மேலும், மனுதாரரின் பெற்றோர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து புதுச்சேரியில் தான் வசித்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
எனவே, பெண்ணுக்கு திருமணமாகி விட்டது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும், அவரது பெற்றோரின் இருப்பிடத்தின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழை மறுக்க முடியாது. திருமணமான பெண்களுக்கு இருப்பிட சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, 2010ம் ஆண்டு ஜன., 7ல் வெளியிடப்பட்ட குறிப்பை தவறாக புரிந்து கொண்டு சான்றிதழ் மறுக்கப்பட்டு உள்ளது.
எனவே, மனுதாரருக்கு இருப்பிட சான்றிதழ் வழங்க மறுத்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.
உடனே இருப்பிட சான்றை, மனுதாரருக்கு தாசில்தார் வழங்க வேண்டும். இருப்பிட சான்றிதழ் பெற மட்டுமே, இந்த உத்தரவு பொருந்தும். மாணவர் சேர்க்கை மற்றும் இதர ஒதுக்கீடுகள் அனைத்தும், தற்போதைய விதிமுறைகள் மற்றும் தகுதி அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
செப்டம்பரில் வர்த்தக பற்றாக்குறை ரூ.2.90 லட்சம் கோடியாக உயர்வு
-
மின்தேவையை சமாளிக்க 7 மாதங்களுக்கு 1,000 மெகாவாட் மின்சாரம்: டெண்டர் கோரியது மின்வாரியம்
-
நாகர்கோவில், கொச்சுவேலி ஆயுதபூஜை சிறப்பு ரயில்கள்
-
அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் தண்டவாளத்தை கடந்து செல்லுங்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்
-
மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் நிலுவை ஊதியத்தை வழங்க கோரிக்கை
-
கதவு திறந்து கிடந்த வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை