செப்டம்பரில் வர்த்தக பற்றாக்குறை ரூ.2.90 லட்சம் கோடியாக உயர்வு

புதுடில்லி: நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, ஆகஸ்ட் மாதத்தில் 2.58 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், செப்டம்பரில் 2.90 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, செப்டம்பரில் பொருட்கள் ஏற்றுமதி 4.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இது 4.21 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதேசமயம், இறக்குமதி 6.78 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 7.16 லட்சம் கோடி ரூபாய்களாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு செப்டம்பரில் பொருட்கள் ஏற்றுமதி 23.04 சதவீதம் அதிகரித்து 4.26 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இறக்குமதியும் 8 சதவீதம் உயர்ந்து 7.16 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்.,–செப்., வரையிலான காலத்தில், பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளிட்ட மொத்த ஏற்றுமதி 13.84 சதவீதம் அதிகரித்து 45.72 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதே காலத்தில் இறக்குமதி 15.68 சதவீதம் அதிகரித்து 52.91 லட்சம் கோடி ரூபாய்களாக உள்ளது. இதனால் ஒட்டுமொத்த வர்த்தக பற்றாக்குறை 7.19 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் இது 5.58 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் பொருட்கள் ஏற்றுமதி 18.51 சதவீதம் அதிகரித்து 24.95 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இறக்குமதி 16.31 சதவீதம் உயர்ந்து 42.00 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதன் காரணமாக, பொருட்கள் வர்த்தக பற்றாக்குறை 17.05 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 15.06 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் தங்க இறக்குமதி 27.32 சதவீதம் குறைந்து 1.85 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் தங்க இறக்குமதி 2.54 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் தங்க இறக்குமதி 17,280 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இது 92,256 கோடி ரூபாயாக இருந்தது.

Advertisement