அரசு பள்ளி ஆசிரியருக்கு மோசடி வழக்கில் சிறை
சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக, 22.41 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், கிருஷ்ணகிரியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அதிமணிக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தொப்பூர் அரசு உயர்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவர் அதிமணி. இவர், சென்னை பெரம்பூர் ரயில்வே பணிமனையில் தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றி வந்த ஸ்ரீராமனுடன் சேர்ந்து, 2013 – 2014ம் ஆண்டுகளில், ரயில்வே வேலை வாங்கித் தருவதாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த, 14 பேரிடம், 22.41 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர்.
இதற்காக போலியான நியமன கடிதங்கள் மற்றும் தேர்வுப் பட்டியலை தயாரித்து, தேர்வர்களை நம்ப வைத்துள்ளார்; ஆனால், அரசு வேலை வாங்கித் தரவில்லை. இது குறித்து, சி.பி.ஐ.,க்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், அதிமணியிடம் விசாரணை நடத்தினர். வசூலித்த, 22.41 லட்சம் ரூபாயில், 16.96 லட்சம் ரூபாயை ஸ்ரீராமனும், 5.44 லட்சம் ரூபாயை ஆசிரியரும் பகிர்ந்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, 2015 மே மாதம், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு, சென்னை சி.பி.ஐ., 9வது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் போது, ஸ்ரீராமன் உயிரிழந்ததால், அவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆசிரியர் அதிமணி மீதான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஈஸ்வரன், மோசடியில் ஈடுபட்ட அதிமணிக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 28,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும்
-
செப்டம்பரில் வர்த்தக பற்றாக்குறை ரூ.2.90 லட்சம் கோடியாக உயர்வு
-
மின்தேவையை சமாளிக்க 7 மாதங்களுக்கு 1,000 மெகாவாட் மின்சாரம்: டெண்டர் கோரியது மின்வாரியம்
-
நாகர்கோவில், கொச்சுவேலி ஆயுதபூஜை சிறப்பு ரயில்கள்
-
அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் தண்டவாளத்தை கடந்து செல்லுங்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்
-
மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் நிலுவை ஊதியத்தை வழங்க கோரிக்கை
-
கதவு திறந்து கிடந்த வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை