மாவட்டம் முழுவதும் மிதமான மழை

திண்டுக்கல்: வடகிழக்கு பருவமழைக்காலம் துவங்கிய நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று மிதமான மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.திண்டுக்கல்லில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து மதியத்துக்கு பின் வானம் இருண்டு மழைக்கு அச்சாரமிட்டது. மாலை 4:00 மணிக்கு துவங்கிய தொடர் மழை மிதமாக அரை மணி நேரம் பெய்தது. இரவு வரை விட்டு விட்டு பெய்த மழையால் ஜி.டி.என்.சாலை, ஏ.எம்.சி.ரோடு, பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி ரோடு, தமிழ் சாலை, மெங்கில்ஸ் ரோடு, நாகல் நகர், ஆர்.எம்.காலனி ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது.மாவட்டத்தின் பிற பகுதிகளான வேடசந்துார், வடமதுரை, பழநி, கொடைக்கானல், ஆத்துார், கன்னிவாடி, நிலக்கோட்டை, நத்தம் உள்ளிட்ட இடங்களிலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக நிலக்கோட்டையில் 50 மி.மீ., மழை பதிவானது. இதுபோல் திண்டுக்கல் 14, காமாட்சிபுரம் 3.40, சத்திரப்பட்டி 46.20, வேடசந்துார் தாலுகா 6, புகையிலை ஆராய்ச்சி மையம் 5.60, பழநி 8, ரோஸ் கார்டன் 6.50, பிரையன்ட் பூங்கா 1.56 மி.மீ., அளவில் மழை பதிவாகியது. மழையால் ஒரு குடிசை இடிந்து சேதமடைந்தது.

Advertisement