தீப திருவிழா அனுமதி சீட்டு இணையதளம் வழியாக வெளிப்படை தன்மையுடன் வழங்க நடவடிக்கை
திருவண்ணாமலை: ‘‘தீப திருவிழாவிற்கு வழங்கப்படும் அனுமதி சீட்டு, இணையதளம் வழியாக வெளிப்படை தன்மையுடன், வினியோகிக்க வேண்டும்,’’ என, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், தீப திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ரமேஷ் பங்கேற்றனர்.
இதில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது.
தீப திருவிழாவிற்கு, 50 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கு வரும் பக்தர்கள், பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு, எவ்வித இடையூறு இன்றி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் அடிப்படை வசதிகளை செய்திட வேண்டும். சாலைகள் மேம்படுத்திட வேண்டும், தங்குதடையற்ற குடிநீர் வினியோகம், கழிவறை வசதி ஏற்படுத்திட வேண்டும். தற்காலிக பஸ் ஸ்டாண்ட், கார் பார்க்கிங் பகுதிகளை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும்.
காவல்துறை சார்பாக கண்காணிப்பு கேமராக்கள் அமைத்திட வேண்டும். மருத்துவ உதவி மையம், நவீன வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதி செய்திட வேண்டும். போதுமான பஸ்களை இயக்க வேண்டும். தீப திருவிழாவிற்கு கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் அனுமதி சீட்டு, இணையதளம் வழியாக வெளிப்படை தன்மையுடன் எந்த ஒரு கட்சி சார்ந்து இல்லாமல் வினியோகிக்க வேண்டும். அதற்கான விளம்பரங்களை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேசுகையில்,‘‘தீப திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை, மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும், பக்தர்கள் இடையூறின்றி விழாவை காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
கூட்டத்தில் அறநிலையத்துறை ஆணையர் வினய், வடக்கு மண்டல ஐ.ஜி., பிரவீன்குமார் அபினபு, கலெக்டர் வந்தனா கார்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, அரசு சார்பில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ரமேஷ் ஆகியோர், 17.35 கோடி ரூபாயில் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 3,038 பயனாளிகளுக்கு, 8.13 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மேலும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 19 லட்சத்து, 90,473 ரூபாய் மதிப்பில் புனரைமக்கப்பட்ட, நவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து, 33 லட்சத்து, 66,746 ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட கூடைப்பந்து மைதானத்தை ஆய்வு செய்து, வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார்.
மேலும்
-
கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து அரூரில் ஆர்ப்பாட்டம்
-
மான் மீது பைக் மோதி கூலி தொழிலாளி பலி
-
மாணவியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
-
பென்னாகரம் அருகே மூதாட்டி கொலை: 2 கிராம் தங்கத்தோடு திருட்டு
-
கல்லுாரி மாணவி மாயம்
-
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை, பாசன கால்வாய்களில் நுரை