கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை, பாசன கால்வாய்களில் நுரை

ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், தென்பெண்ணை ஆறு மற்றும் பாசன கால்வாய்களில் ரசாயன நுரை பெருக்கெடுத்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 253 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த, 15ம் தேதி, 40 மி.மீ.,, நேற்று முன்தினம், 50 மி.மீ., மழை பெய்தது. அதேபோல், கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டியது. அதனால், அணைக்கு நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு, 846 கன அடியாக அதிகரித்தது.
அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 643 கன அடியும், வலது, இடது கால்வாய்களில் பாசனத்திற்கு, 88 கன அடியும் என, 731 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு வந்த நீரில் அதிகளவு ரசாயனம் கலந்திருந்ததால், தென்பெண்ணை ஆறு மற்றும் பாசன கால்வாய்களில் திறக்கப்பட்ட நீரில் ரசாயன நுரை ஏற்பட்டு துர்நாற்றம் வீசியது.
தென்பெண்ணை ஆறு மற்றும் பாசன கால்வாய்களில் தொடர்ந்து ரசாயன நுரை அதிகரித்து வருவது, பாசன விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கர்நாடகா மாநில அலட்சியத்தால், தென்பெண்ணை ஆறு மெல்ல, மெல்ல மாசடைந்து, மோசமான நிலைக்கு சென்று விட்டதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Advertisement