கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து அரூரில் ஆர்ப்பாட்டம்

அரூர்: அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து, தொழிலாளர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கூட்டுறவு சர்க்கரை ஆலை முன், பல்வேறு தொழிற்சங்கங்களின் சார்பில், தொழிலாளர்கள் ஆலை நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் வழக்கமாக கடந்த, 34 ஆண்டுகளாக ஆயுதபூஜைக்கு முன் நாளில் காலை, 10:00 மணிக்கு பூஜை போடப்பட்டு, 11:00 மணிக்கு பூஜை முடித்து தொழிலாளர்கள் புறப்பட்டு செல்வது வழக்கம். ஆனால் இம்முறை ஆலை நிர்வாகம் சார்பில், 1:00 மணிக்கு பூஜை நடக்கும் தொழிலாளர்கள், 3:00 மணிக்கு புறப்பட்டு செல்லலாம் என அறிவித்தனர். இதற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், நிர்வாகத்தினர் தன்னிச்சையாக எடுத்துள்ள முடிவுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களின் போராட்டம் குறித்து, சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் கேட்டபோது, ஆயுத பூஜைக்கு முன்தினம் தொழிலாளர்களின் வசதிக்காக, முன்கூட்டியே விடுவது வழக்கம்தான். ஆனால் நடுவில் மற்றொரு விடுமுறை நாள் (ஞாயிறு) உள்ளபோது, பணி நாளான சனிக்கிழமை முன்கூட்டியே விட முடியாது என்பதால் மறுக்கப்பட்டது என்றனர்.

Advertisement