நாய்களை வேட்டையாடிய சிறுத்தை வனத்துறை கூண்டில் சிக்கியது

பாலக்காடு: பாலக்காடு, அகத்தேத்தறை செறாடு மற்றும் அதன் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில், கடந்த சில வாரங்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக, ஊருக்குள் புகுந்த சிறுத்தை வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்களை தொடர்ச்சியாக வேட்டையாடியது. இதனால், கிராம மக்கள் கடும் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கும், உள்ளாட்சி நிர்வாகத்திற்கும் மக்கள் புகார் அளித்தனர்.

கிராம மக்களின் பாதுகாப்பிற்காக அகத்தேத்தறை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அப்பகுதியில் புதிய தெருவிளக்குகளை அமைத்தது. மேலும், செறாடு மைத்ரி நகர் அருகிலுள்ள வனத்துறை அலுவலக பகுதியில் கூண்டு ஒன்றை வனத்துறையினர் அமைத்தனர். நள்ளிரவில் இரை தேடி வந்த சிறுத்தை அந்த கூண்டிற்குள் சென்று சிக்கிக்கொண்டது.

தகவலறிந்து, வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

பிடிபட்ட பெண் சிறுத்தைக்கு நான்கு வயது இருக்கும் என, வனத்துறையினர் கூறினர். மேலும், அந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement