கட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணிக்கும் எம்.எல்.ஏ.,: அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி
ஓசூர்: ஓசூரில், கட்சி நிகழ்ச்சிகளை, எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணாரெட்டி தொடர்ந்து புறக்கணித்து வருவதால், அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
அ.தி.மு.க.,வில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி. கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விசுவாசியாக காட்டிக்கொண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வானார். அதன்பின், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம் தலைமையில் செயல்பட்ட எதிரணியுடன் சேர்ந்து, விஜய் தலைமையிலான அரசுக்கு நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஆதரவு தெரிவித்தார். அதனால் அவரது மேற்கு மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக இருந்த ராமுவிடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மே மாத இறுதியில் இ.பி.எஸ்.,சை நேரில் சந்தித்த பாலகிருஷ்ணாரெட்டிக்கு, கட்சியில் அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதன் பின் கடந்த ஜூலையில், இ.பி.எஸ்., தலைமையில் நடந்த, மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டத்தில், பாலகிருஷ்ணாரெட்டி எம்.எல்.ஏ., பங்கேற்கவில்லை. கடந்த செப்., 15ம் தேதி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த அண்ணாதுரை பிறந்த நாள் விழா நிகழ்ச்சியை பாலகிருஷ்ணாரெட்டி புறக்கணித்தார்.
தனது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்தில், அண்ணாதுரை பிறந்த நாளை கொண்டாடினார். அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்திற்கும், பாலகிருஷ்ணாரெட்டி வருகை தரவில்லை. கட்சியின், 55வது ஆண்டு துவக்கவிழாவையொட்டி, ஓசூரிலுள்ள ராயக்கோட்டை சாலை சந்திப்பில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு, மாவட்ட செயலாளர் ராமு தலைமையில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கும் பாலகிருஷ்ணாரெட்டி வரவில்லை.
இது குறித்து, அ.தி.மு.க., விசுவாசிகள் கூறுகையில், 'கட்சி அமைப்பு செயலாளர் மற்றும் ஓசூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., என்ற முறையில், கட்சி துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கலாம். ஆனால், தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார். நேற்று முன்தினம் அரசு சார்பில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, த.வெ.க., மாவட்ட செயலாளர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்' என்றனர்.
பாலகிருஷ்ணாரெட்டி ஆதரவாளர்கள் கூறுகையில்,'மாவட்ட செயலாளர் பதவியை பறித்து விட்டனர். அதன் பின் எப்படி கட்சி நிகழ்ச்சிக்கு செல்வது. கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. வரும், 23ம் தேதி கட்சி துவக்க விழா பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. அதிலும், பாலகிருஷ்ணாரெட்டி பங்கேற்பது சந்தேகம் தான்' என்றனர்.
மேலும்
-
கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து அரூரில் ஆர்ப்பாட்டம்
-
மான் மீது பைக் மோதி கூலி தொழிலாளி பலி
-
மாணவியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
-
பென்னாகரம் அருகே மூதாட்டி கொலை: 2 கிராம் தங்கத்தோடு திருட்டு
-
கல்லுாரி மாணவி மாயம்
-
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை, பாசன கால்வாய்களில் நுரை