உட்பிரிவு செய்யும் அதிகாரம் சர்வேயருக்கே வழங்க தீர்மானம்

நாமக்கல்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், மாவட்ட பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.

சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். துணை தலைவர் சுபாஷ் வெங்கடேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ராஜா, பொதுச்செயலாளர் அண்ணா குபேரன் ஆகியோர், கோரிக்கை குறித்து பேசினர்.

கூட்டத்தில், அனைத்து பணி களையும் கருத்தில் கொள்ளாமல், உட்பிரிவு பணியை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தும் போக்கை கைவிட வேண்டும். டார்கெட் முறையை ஒழிக்க வேண்டும். நீதிமன்ற பயிற்சி, பவானிசாகர் பயிற்சி உள்ளிட்ட வருவாய்த்துறைக்கு அளிக்கக்கூடிய அனைத்து பயிற்சிகளையும், நில அளவை துறைக்கும் வழங்க வேண்டும்.

வி.ஏ.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்ட உட்பிரிவு செய்யும் அதிகாரத்தை ரத்து செய்து, மீண்டும் நில அளவர்களுக்கே வழங்க வேண்டும். மாவட்ட அளவில் பணியிட மாறுதல்களை செய்ய, கலந்தாய்வு முறையை பின்பற்றி வழிவகை செய்ய வேண்டும். ஒப்பந்த புல உதவியாளர்கள் மற்றும் உரிமம் பெற்ற நில அளவர்கள் முறையை கைவிட்டு, காலமுறை ஊதியத்தில், நில அளவர் மற்றும் புல உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement