பாரா ஆசிய விளையாட்டு: முதல் நாளில் இந்தியா பதக்க மழை
நகோயா: ஆசிய பாரா விளையாட்டு முதல் நாளில் இந்தியா 4 தங்கம் உட்பட, 11 பதக்கம் கைப்பற்றியது.
ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' ஆசிய விளையாட்டு 5வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 168 பேர் உட்பட, 45 நாடுகளை சேர்ந்த 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இன்று(அக்.,19) பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்.எச்.1 பிரிவில் துப்பாக்கிசுடுதல் போட்டி நடந்தது.
இந்தியா சார்பில் பாரிஸ் பாராலிம்பிக்கில் (2024) பதக்கம் வென்ற மோனா அகர்வால், 38, (வெண்கலம்), அவனி லெஹரா, 24, (தங்கம்), என இருவர் உட்பட 21 பேர் பங்கேற்றனர். இம்முறை தகுதிச்சுற்றில் 629.1 புள்ளி எடுத்த மோனா, ஆசிய பாரா விளையாட்டில் அதிக புள்ளி எடுத்து சாதனை படைத்தார். அவனி 626.4 புள்ளி எடுத்தார். முதல் இரு இடம் பிடித்த இருவரும் 8 பேர் மோதிய பைனலுக்கு முன்னேறினர்.
அடுத்து நடந்த பைனலில் மோனா, 250.0 புள்ளி எடுத்து புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 0.4 புள்ளி பின்தங்கிய இந்தியாவின் மற்றொரு வீராங்கனை அவனி (249.6) வெள்ளி வென்றார். தென் கொரியாவின் யுன்ரி லீக்கு (227.9) வெண்கலம் கிடைத்தது.
* ஆண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஸ்வருப் மஹாவிர், 205.9 புள்ளியுடன் நான்காவது இடம் பிடிக்க, பதக்க வாய்ப்பு நழுவியது.
இரண்டு பதக்கம்
பார்வை குறைபாடுள்ள பெண்களுக்கான 1500 மீ., 'டி 12, 13' பிரிவு பைனல் நடந்தது. இந்தியா சார்பில் பங்கேற்ற சவுமியா, 5 நிமிடம், 12.39 வினாடி நேரத்தில் வந்து, 621 புள்ளிகள் எடுத்து, முதலிடம் பெற்று, தங்கம் கைப்பற்றினார். இந்தியாவின் மற்றொரு வீராங்கனை ராதா வெங்கடேஷ் (5:30.90), 421 புள்ளியுடன் வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார்.
பெண்களுக்கான (பார்வை குறைபாடு) 1500 மீ., 'டி 11' பிரிவில் இந்தியாவின் ராவன்னி, 5 நிமிடம், 41.85 வினாடி நேரத்தில் ஓடி, மூன்றாவது இடம் பெற்று, வெண்கலம் வசப்படுத்தினார்.
நிஷாத் அபாரம்
ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் ('டி 47' பிரிவு) நடந்தது. இந்தியாவின் நிஷாத் குமார், 27, உட்பட 12 பேர் பங்கேற்றனர். 3, 5வது வாய்ப்பில் நிஷாத் குமார், அதிகபட்சம் 7.11 மீ., தாண்டி, முதலிடம் பிடிக்க, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். உஸ்பெகிஸ்தானின் ஒமாத்பெக் (6.99), இலங்கையின் சப்ரான் (6.55) வெள்ளி, வெண்கலம் பெற்றனர்.
ஒட்டுமொத்தமாக முதல் நாளில் இந்தியா 4 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என 11 பதக்கம் கைப்பற்றியது.
ரவி கார்த்திக் 'வெள்ளி'
ஆண்களுக்கான 100 மீ., 'எஸ் 13' பிரிவு நீச்சல் போட்டி நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் ரவி கார்த்திக் புதிகினா , 56.68 வினாடி நேரத்தில் வந்து இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். உஸ்பெகிஸ்தானின் இகோர் (52.90), கஜகஸ்தானின் விக்டர் (57.23) தங்கம், வெண்கலம் வென்றனர்.
* ஆண்களுக்கான 400 மீ., பிரீஸ்டைல் 'எஸ் 7' பிரிவில் இந்தியாவின் நிரஞ்சன் முகுந்தன் (5:38.77 நிமிடம்), கோபிசந்த் (5:40.44) 4, 5வது இடம் பெற்றனர்.
* ஆண்களுக்கான 100 மீ., பேக்ஸ்டிரோக் 'எஸ் 11' பிரிவில் இந்தியாவின் ஹிமான்சு (1:13.77) 4வது இடம் பெற்றார்.
* பெண்களுக்கான 400 மீ., பிரீஸ்டைல் 'எஸ் 8' பிரிவில் இந்தியாவின் வைஷ்ணவி (6:22.72), 6வது இடம் பிடித்தார்.
ஜூடோவில் இரண்டு பதக்கம்
பெண்களுக்கான 52 கிலோ, ஜூடோ ஜே 2 பிரிவில் இந்தியா சார்பில் கோகிலா பங்கேற்றார். அரையிறுதியில் கோகிலா, சீனாவின் லியு இயை சந்தித்தார். இதில் 2-1 என வென்று பைனலுக்கு முன்னேறினார்.
அடுத்து நடந்த பைனலில் கோகிலா, கஜகஸ்தானின் உலன் பெக்கை சந்தித்தார். இதில் கோகிலா 0-1 என தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. கடந்த முறை இவர் வெண்கலம் (2023, 48 கிலோ) வென்றிருந்தார்.
* ஆண்களுக்கான 70 கிலோ, ஜே 1 பிரிவில் இந்தியாவின் கபில் பார்மர், அரையிறுதியில் 0-1 என இந்தோனேஷியாவின் ஜுனேடியிடம் என தோல்வியடைந்தார். அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கபில், 1-0 என இந்தோனேஷியாவின் ராப்லி அனாப்பை சாய்த்து, பதக்கம் கைப்பற்றினார்.
ஈட்டி எறிதலில் அசத்தல்
ஆண்களுக்கான ஈட்டி எறிதல், எப். 46 பிரிவில் இந்தியா சார்பில் ரிங்கு, அஜீத் சிங் என இருவர் பங்கேற்றனர். கடைசி வாய்ப்பில் அதிகபட்சம் 65.11 மீ., துாரம் எறிந்த ரிங்கு, 27, முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
நான்காவது வாய்ப்பில் அதிகபட்சம் 65.02 மீ., துாரம் எறிந்த அஜீத் சிங், 33, இரண்டாவது இடம் பிடிக்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்தோனேஷியாவின் ரிஜால் (55.30) வெண்கலம் வென்றார்.
தடகளத்தில் 'ஆறு'
நேற்று முதல் நாளில் தடகளத்தில் மட்டும் இந்தியா, 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கம் கைப்பற்றியது.
மேலும்
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
-
கல்லுாரி மாணவர்கள் உட்பட நால்வர் கைது விருதை அருகே 55 கிராம் கஞ்சா பறிமுதல்
-
என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கல்
-
விவசாய நிலங்களில் காப்பர் ஒயர் திருட்டு: வானுார் அருகே சிறுவன் உட்பட மூவர் கைது