நீர்நிலை ஓரங்களில் பனை விதை நடவு: விவசாயிகள் எதிர்பார்ப்பு

இளையான்குடி: இளையான்குடி,மானாமதுரை பகுதிகளில் கிடைக்கும் பனை விதைகளை சேகரித்து நீர்நிலைகளின் கரையோரத்தில் நடவு செய்ய வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

பாரம்பரிய மரங்களில் ஒன்றான பனை மரங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும்,நிலத்தடி நீர் மற்றும் மண் வளத்தைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பனை மரத்தின் அனைத்து பகுதிகளும் பல்வேறு வகைகளில் பயன்படுவதோடு கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திலும் பனை மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் மற்றும் வனத்துறை, நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் பனை விதைகளை நடவு செய்வது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது.

இதனை ஊக்குவிக்கும் வகையில் கிராமப் பகுதிகளில் 125 நாள் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களைக் கொண்டு கிராமப் பகுதிகளில் கிடைக்கும் பனை விதைகளை சேகரித்து நீர் நிலைகளின் கரை ஓரத்தில் சில வருடங்களாக தொடர்ந்து நடவு செய்து வருகின்றனர்.

இதன் மூலம் மழைக்காலங்களில் விதை முளைத்து, பனை மரங்களாக வளர்வதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் இத்தகைய நடவடிக்கை உதவியாக இருந்து வருகிறது. இந்த வருடம் தற்போது பனை மரங்களில் இருந்து கீழே விழுந்து கிடக்கும் பனை விதைகளை தற்போது வரை சேகரிக்காமல் இருப்பதால் அவை வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த ஆண்டும் மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் கிடைக்கும் பனை விதைகளை 125 நாள் திட்ட தொழிலாளர்கள் மூலம் சேகரித்து, கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களின் கரையோரங்களில் நடவு செய்ய வேண்டும் என விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement