ரெடிமேட் ஆடைகள் உற்பத்தியில் குட்டி ஜப்பானாக மாற வரும் நத்தம்

ஆண்களுக்கான ரெடிமேட் ஆடைகள் உற்பத்தியில் நத்தம் குட்டி ஜப்பானாக மாறி வருகிறது. இங்கு தயாராகும் ஆடைகள் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் ரெடிமேட் ஆடைகள் சந்தையில் நத்தம் ஆடைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இந்த நவீன காலத்தில் நாம் உண்ணும் உணவு துரிதமாக மாறியது மட்டுமல்ல நாம் அணியும் ஆடைகளும் மாறிவிட்டன. பண்டிகை காலங்களில் வேட்டி, சட்டை அணிந்து வந்த நம்மில் பலர் தற்போது ரெடிமேட் ஆடைகளுக்கு மாறிவிட்டோம். இதனால் சிறிய கிராமங்களில் கூட ரெடிமேட் ஆடைகள் உற்பத்தி துவங்கப்பட்டு குடிசை தொழிலாய் மாறியுள்ளது.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகருக்குள் எந்த தெருவுக்குள் நுழைந்தாலும் ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கப்படுவதை காணலாம். வீடுதோறும் தையல் இயந்திரங்கள் இயங்கும் சத்தத்தை கேட்கலாம்.

கடந்த 15 ஆண்டுகளாக ஆண்களுக்கான ரெடிமேட் ஆடைகளை தைத்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் நத்தம் ரெடிமேட் ஆடை உரிமையாளர்கள் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தின் ‘குட்டி ஜப்பான்’ என்ற பெயரை நத்தம் பெற்றுள்ளது.

நத்தம், கோபால்பட்டி, சிறுகுடி, கோட்டயூர், புதுப்பட்டி, பரளி, வாத்திப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக ரெடிமேட் ஆடை உற்பத்தி தொழில் விளங்குகிறது. இங்கு 300 ரெடிமேட் ஆடை உற்பத்தியாளர்கள் உள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.

2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ரெடிமேட் சட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. பாலியஸ்டர், பருத்தி, மோனோ காட்டன், பிளாபில் மற்றும் ரேமண்ட் காட்டன் போன்ற துணிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ரெடிமேட் ஆடைகள் ரூ.150 முதல் ரூ.400 வரை விற்கப்படுகின்றன.

இங்கு உற்பத்தியாகும் ரெடிமேட் ஆடைகள் கேரளம், ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களுக்கும், சென்னை, மதுரை, தேனி, திருப்பூர், திருச்சி நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது தீபாவளி பண்டிகைக்காக வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவியத் துவங்கிய நிலையில் ஆடைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

எளிய, நடுத்தர மக்களுக்கும் சட்டைகள் குறைந்த விலையில் கிடைப்பதால் நத்தம் ரெடிமேட் ஆடைகள் சந்தையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கு ஜவுளி பூங்காவை நிறுவி இத்தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement