தாசில்தார் அலுவலக வளாகத்தில் மக்கள் காத்திருப்பு போராட்டம்

குளித்தலை:குளித்தலை தாசில்தார் அலுவலகம் முன், நேற்று முன்தினம் மாலை, பொது பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கள்ளை கிராமம் சர்வே எண்கள்- 248, 249, 250, 251 மற்றும் 490 ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும், பொது பாதையை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, தமிழக முதல்வர், கலெக்டர், சப்-கலெக்டர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தாசில்தார் மதிவாணன் தலைமையில் சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர்கள் அளவிடும் பணி மேற்கொண்டனர். அப்போது, திடீரென கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் அறிவிக்கப்பட்டதால், அவர்கள் அளவிடும் பணியே தற்காலிகமாக நிறுத்தி விட்டு சென்றனர்.
தனியார் சோலார் நிறுவனத்திற்கு ஆதரவாக, வருவாய் துறையினர் செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து, குளித்தலை தாசில்தார் அலுவலக முன், கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, குளித்தலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மதிவாணன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் இன்ஸ்பெக்டர்கள், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மத்திய மண்டல செயலாளர் கள்ளை அருள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இதில், 15 தினங்களுக்கு பின் சட்டப்படி அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, மீண்டும் அளவீடு பணி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement