சிவகங்கை மருத்துவமனையில் தீயணைப்பான்கள் மாயம்
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தீ விபத்து காலத்தில் தண்ணீரை பீச்சி அடிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய தீயணைப்பான் ஓஸ் வைக்கும் பாக்ஸ்கள் சேதப்படுத்தப்பட்டு மாயமாகியுள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் மற்றும் மருத்துவமனையில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பான்கள், மணல் வாளிகள் மற்றும் அவசரகால வெளியேறும் வழிகள் போன்ற அடிப்படை தீயணைப்பு உபகரணங்கள் பராமரிக்கப்படுகின்றன. மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளும் தீயணைப்புத் துறையின் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை உறுதி செய்ய அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல் தீயணைப்புத் துறையினரின் வழிகாட்டுதலின்படி இந்த உபகரணங்கள் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு செயல்பாட்டில் இருப்பதை மருத்துவ கல்லுாரி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மருத்துவ கல்லுாரி வளாகத்தில் வெளிபுறத்தில் வைக்கப்பட்டுள்ள தீயணைப்பு பெட்டிகளில் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டு அதில் இருந்த தண்ணீர் பீச்சி அடிக்ககூடிய ஓஸ் இல்லாமல் உள்ளது. இதனால் தீ விபத்து போன்ற அவசர காலத்தில் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மருத்துவமனை நிர்வாகத்தினர் மருத்துவமனையில் உள்ள தீயணைப்பான்களை முறையாக பராமரித்து அனைத்து பெட்டிகளிலும் பைப் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.