விபத்து அபாயப் பள்ளம்: குச்சி நட்டு 'பாதுகாப்பு'

பல்லடம்: பல்லடம் அருகே அருள்புரத்தில், குடிநீர் குழாய் உடைப்புக்காகத் தோண்டப்பட்ட குழி சரிவர மூடப்படாததால், சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் குச்சியை நட்டு எச்சரிக்கை ஏற்படுத்தியுள்ளனர்.

கரைப்புதுார் ஊராட்சி, அருள்புரம் பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள், சாய ஆலைகள், தொழிற்சாலைகள் உள்ளன. பல்லடம் - திருப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பள்ளி மாணவர்களும் அதிக அளவில் இவ்வழியாகச் செல்கின்றனர்.

குடிநீர் குழாய் உடைப்பைச் சரிசெய்யத் தோண்டப்பட்ட குழி, பணி முடிந்த பின்னர் முறையாக மூடப்படவில்லை. தற்காலிகமாக மண்ணைக் கொட்டி மூடியதால், மழையில் மண் அரித்துச் செல்லப்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது. விபத்து ஏற்படும் முன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பள்ளத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லடம்- - திருப்பூர் ரோடு, அருள்புரம் பகுதியில் உள்ள பள்ளத்துக்கு குச்சி வைத்து பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement