பொது கட்டட விதிகளில் மீண்டும் வருகிறது திருத்தம்: வீட்டுவசதி துறை நடவடிக்கை
சென்னை : பொது கட்டட விதிகள், தற்போதைய தேவைக்கு ஏற்ப, மீண்டும் திருத்தப்பட உள்ளதாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுதும் அமல்படுத்தும் வகையில், பொது கட்டட விதிகள், 2019ல் அறிவிக்கப்பட்டன. பெருநகர் வளர்ச்சி குழுமம் முதல் உள்ளாட்சி அமைப்புகள் வரை, கட்டட அனுமதியில் சீரான நடைமுறையை கடைப்பிடிக்கும் வகையில், இந்த விதிகள் உருவாக்கப்பட்டன.
22 அடி அகலம்
கடந்த, 2019ல் அமல்படுத்தப்பட்ட நிலையில், அதில் சில இடங்களில் திருத்தங்கள் தேவைப்பட்டன. அதனால், 2024 வரை, பொது கட்டட விதிகளில், அந்தந்த சமயத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கட்டடங்களின் உயர வரம்பு, பரப்பளவு வரம்பு, கட்டட அனுமதி அதிகார வரம்பு போன்றவற்றில் திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மூன்றாவது முழுமை திட்ட வரைவு ஆவணம் தயாரிப்பதற்கான பணி நடந்து வருகிறது. பொது கட்டட விதிகளை திருத்தும் பணிகளை, இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். முதல் கட்டத்துக்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டட அனுமதி பணியில் ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக, பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அதன் அடிப்படையில், தற்போது அதிக உயரமில்லாத பிரிவில் கட்டடத்தின் உயர வரம்பு, 18 மீட்டர் அதாவது, 59 அடியாக உள்ளது. இது, 24 மீட்டர் அதாவது, 78 அடி வரை திருத்தி அமைக்க வாய்ப்புள்ளது. சாதாரண கட்டடங்களுக்கான எப்.எஸ்.ஐ., எனப்படும் தளபரப்பு குறியீடு, 2 மடங்காக உள்ளது. இதில், 50 சதவீதம் வரை உயர்வு வழங்க வாய்ப்புள்ளது. இயல்பு நிலையில், 22 அடி அகல சாலைகள் இருப்பது கட்டாயம்.
சாலை அகலங்கள்
அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை செய்யப்பட்ட இடங்களில், 14 அடி, 16 அடி அகல சாலைகள் உள்ளன. இதன் தொடர்பு பகுதிகளில், கட்டட அனுமதி வழங்குவதற்கான சாலை அகலங்கள் வரையறுக்கப்பட உள்ளன. மேலும், கட்டடங்களில் பக்கவாட்டு காலியிடம் விடுவது தொடர்பான விதிகளும் மாற்றப்பட உள்ளன. தொழிலக மற்றும் வணிக கட்டடங்களுக்கு தேவையான மாற்றங்களும் செய்யப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
இபிஎஸ்யும், திமுகவும் ஒன்று தான்; சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்
-
தொகுதி மறுவரையறை விவகாரம்; பேச்சுவார்த்தைக்கு முன்வராத காங்கிரஸ்; கிரண் ரிஜுஜூ குற்றச்சாட்டு
-
காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர் விஜய் மரியாதை
-
எஸ்பிஐ வங்கி மீது சைபர் தாக்குதல்; 3.900 வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800, வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைவு
-
இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டம்; அதிபர் டிரம்ப் தகவல்