ஏமன் ராணுவ முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீச்சு; 53 வீரர்கள் பலி

​ஏடன்: ஏமனில் அரசுப் படை பயிற்சி முகாம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில், 53 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த பின் ஒரே நாளில் நிகழ்ந்த ஆகப்பெரிய உயிர்ச்சேதம் இதுவாகும்.

​இதுகுறித்து அந்நாட்டு செய்தி வட்டாரங்கள் தெரிவித்ததாவது: ​மத்திய கிழக்கு நாடான ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. ​இந்நிலையில், தென் ஏமனின் ஷப்வா மாகாணத்தில் உள்ள அல்-ஆலம் ராணுவ பயிற்சி முகாமை குறிவைத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

​அணிவகுப்பில் விழுந்த குண்டுகள்:



காலை பயிற்சியில் ஈடுபடுவதற்காகப் புதிய வீரர்கள் அனைவரும் மைதானத்தில் அணிவகுத்து நின்றிருந்தனர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் முகாம் மீது ஏவுகணைகள் வந்து விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. ​தாக்குதலின் கோரத்தாண்டவத்தில் சிக்கி 53 வீரர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். பலியானவர்களில் பெரும்பாலானோர் புதிதாகப் படையில் இணைந்த இளம் வீரர்கள் ஆவர்.

​இத்தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

​ஏமனில் 2022-ல் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததற்குப் பிறகு, ஒரே தாக்குதலில் இத்தனை வீரர்கள் பலியானது இதுவே முதல் முறை என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement