அரசு அளிக்கும் விடுமுறை நாட்களிலும் பலன் ஏதுமின்றி வேலை பார்க்கிறோம்: குமுறுகின்றனர் துாய்மை பணியாளர்கள்

கோவை: மாநகராட்சியில் 4,650 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் சம்பளம் வழங்குகிறது. தமிழக அரசின் பொது விடுமுறை நாள்களை, வாரவிடுமுறையாக கழிப்பதாக பி.எம்.எஸ். தொழிலாளர் சங்கத்தின் தூய்மை பணியாளர் பிரிவு மாவட்ட பொதுச்செயலர் ஸ்டாலின் பிரபு குற்றஞ்சாட்டுகிறார்.

அரசு அறிவித்துள்ள அடிப்படை தொழிலாளர் சட்டத்தை ஒப்பந்த நிறுவனம் பின்பற்றுவதில்லை. சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய தேசிய விடுமுறை நாட்களுக்கு அளிக்கப்படும் கட்டாய விடுமுறையையும் வார விடுமுறையாக கணக்கிடுகிறார்கள்.

அந்த வாரங்களில் வாரவிடுமுறையை ரத்து செய்து பணிக்கு வர கட்டாயப்படுத்துவதால், ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகை நாட்களிலும் வேலை பார்க்கிறோம். தொழிலாளர் சட்டப்படி அரசு விடுமுறை நாட்களில் பணிபுரிந்தால், மற்றொரு நாளில் மாற்றுவிடுப்போ, கூடுதல் சம்பளமோ வழங்க வேண்டும். ஆனால் அப்படி தருவதில்லை’’ என்கிறார் இவர்.

தூய்மை பணியாளர்களுக்கு அரசு விடுமுறைகளுக்கான தினக்கூலியை பெற்றுத்தர வேண்டும், அரசு விடுமுறை நாட்களில் வேலை பார்க்கும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு, சட்டப்படி 2 நாள் சம்பளம் வழங்க வேண்டும், அரசு விடுமுறையை, வார விடுமுறையாக கணக்கிடுவதை தடுக்க வேண்டும் என்பதே பணியாளர்களின் கோரிக்கைகள்.

Advertisement