கவியருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப்பயணியர்
ஆனைமலை: ஆழியாறில் குவிந்த சுற்றுலாப்பயணியர், கவியருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டம், பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆழியாறு கவியருவிக்கு சுற்றுலாப்பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர். இயற்கையாக கொட்டும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
தண்ணீர் வரத்து குறைவு மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருந்ததால், கடந்த மார்ச் மாதம், 13ம் தேதி தற்காலிகமாக ஆழியாறு கவியருவிக்கு சுற்றுலாப்பயணியர் செல்ல அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வனத்துறை அனுமதி அளித்ததையடுத்து, கடந்த ஜூலை மாதம் முதல் கவியருவிக்கு சுற்றுலாப்பயணியர் அனுமதிக்கப்பட்டனர். விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணியர் குடும்பத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.
நேற்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் சுற்றுலாப்பயணியர் குடும்பத்துடன் ஆழியாறில் குவிந்து, அணை அழகை கண்டு ரசித்ததுடன், கவியருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.
இ – பாஸ் கட்டாயம்
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்ல, இ – பாறஸ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ – பாஸ் இருந்தால் மட்டுமே வால்பாறைக்கு செல்ல முடியும். இதற்காக, ஆழியாறு சோதனைச்சாவடியில் சோதனை செய்த பின்னரே சுற்றுலாப்பயணியர் அனுமதிக்கப்பட்டனர்.
பண்டிகை நாள் விடுமுறையையடுத்து, வால்பாறை செல்ல சுற்றுலாப்பயணியர் ஆர்வம் காட்டினர். ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறையினர் மற்றும் போலீசார், இ – பாஸ் இருப்பவர்களை மட்டும் வால்பாறை செல்ல அனுமதித்தனர். இ – பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.