ரயில் உணவு தரத்தை கண்காணிக்க நடவடிக்கை

சென்னை: ரயில்களில் பயணியருக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை கண்காணிக்கும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம், இந்திய தர கவுன்சிலுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ரயில் பயணியருக்கான உணவு வினியோகத்தில், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. நாடு முழுதும், 800க்கும் மேற்பட்ட, ஐ.ஆர்.சி.டி.சி., சமையலறைகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர, ரயில்வேயின் கீழ் உரிமம் பெற்ற சில நிறுவனங்கள் வாயிலாகவும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ரயில்களில் பயணியருக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை கண்காணிக்கும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம், இந்திய தர கவுன்சிலுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

இந்த ஒப்பந்தம் வாயிலாக, ரயில்களில் உணவு தயாரித்து வழங்கும் மையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்களில், உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து, திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வகுத்துள்ள விதிமுறைகளின்படி, உணவு தயாரிப்பு மற்றும் வினியோக மையங்கள் செயல்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்படும்.

இதில் கண்டறியப்படும் குறைபாடுகளை உடனடியாக சரிசெய்வதுடன், மீண்டும் அவை ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement