குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உழவர் அட்டை பதிவுக்கு மறுப்பு: ‘இன்சூரன்ஸ்’ செய்ய முடியாமல் தவிப்பு
தஞ்சாவூர்: தமிழகத்தில் கோவில்கள், மடங்கள், வக்ப் போர்டுகள், சர்ச்சுகள் மற்றும் அறக்கட்டளைகள் உள்ளிட்ட அனைத்து சமய நிறுவனங்களுக்கும் சொந்தமான, லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. அதிகப்பட்சமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில், 4 லட்சம் விவசாயிகள் குத்தக்கைக்கு சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசின் மானியங்கள், திட்டங்களை பெற, விவசாயிகளுக்கான உழவர் அடையாள அட்டை அவசியமாக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வரும் சூழலில், குத்தகை விவசாயிகளுக்கு பதிவு செய்ய மறுப்பதால், வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது, ‘எல் நினோ, சூப்பர் எல் நினோ’ பாதிப்புகளால் விவசாய நிலங்களுக்கு குத்தகை விவசாயிகள் ‘இன்சூரன்ஸ்’ செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை விமல்நாதன் கூறியதாவது:
மத்திய அரசு கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, விவசாயிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் பணியை செய்து வருகிறது. ஆனால் இத்திட்டத்தில், இந்தியாவில் உள்ள, 4 கோடி குத்தகை விவசாயிகள் இதுவரை பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ளனர்.
இதில், பெரும்பான்மையானவர்கள் பழங்குடியினர், பட்டியல் இனத்தவர்கள், மலைவாழ் மக்கள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளிகள். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்கது.
தமிழகத்தில் காவிரி சமவெளி மாவட்டங்களில் உள்ள கோவில்கள், ஆதீனங்கள், மடங்கள், பேராலயங்கள், வக்ப் வாரியம், அறக்கட்டளை, ஜமீன் சொத்துக்களின் குத்தகைதாரர்கள் உட்பட, 4 லட்சம் விபரங்கள் இதுவரை பதிவு செய்யப்படாமல் உள்ளது.
இதற்கு, மத்திய அரசு சிறப்பு அரசாணையை அரசிதழில் வெளியிட்டு, குத்தகை விவசாயிகள் பயன் பெறும் வகையில் திட்டத்தை அறிவிக்க வேண்டும்
இவ்வாறு, அவர் கூறினார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் கூறியதாவது:
கடந்த, 2012ம் ஆண்டு முதல், 2018 வரை ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சி, புயல் வெள்ள பேரிடரால் பாதிக்கப்பட்ட போது, குத்தகை விவசாயிகள் பாதிப்பை சந்தித்தனர்.
மேலும், குத்தகை பாக்கியை அரசு ரத்து செய்யாமல், தமிழக அரசு வருவாய் நீதிமன்றங்கள் மூலம் விவசாயிகளை அரசு வெளியேற்றியது.
கடந்த, 2022ம் ஆண்டு, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கோவில் சொத்துக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டும், குத்தகை நிலங்களை இணையதளத்தில் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டன.
கடந்த தி.மு.க., ஆட்சியில் சுயநலத்திற்காக, மறைமுகமாக கோவில் குத்தகை நிலங்களை ஏலம் விட்டு அதிகார வர்க்கம், அபகரிப்பதற்கு வழிவகுத்தது. மத்திய அரசின் உழவர் அட்டை பெற, குத்தகை விவசாயிகளுக்கு தகுதி இல்லை என மறுப்பதால், இன்சூரன்ஸ் செய்யவும், மானியம் பெறவும் வருவாய்துறையில் சான்று வழங்க மறுத்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு த.வெ.க., அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
பட்டாசு கடைகளுக்கு இடம் ஒதுக்கும் இ- டெண்டர்: கண்காணிக்கிறது ஐகோர்ட்
-
செஞ்சி அருகே சிறுமி, பெண் மாயம்: மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசார்
-
ஆசிரியர் வீட்டில் திருட்டு இருவரிடம் விசாரணை
-
கல்லுாரி மாணவர்கள் உட்பட நால்வர் கைது விருதை அருகே 55 கிராம் கஞ்சா பறிமுதல்
-
என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கல்
-
விவசாய நிலங்களில் காப்பர் ஒயர் திருட்டு: வானுார் அருகே சிறுவன் உட்பட மூவர் கைது