வெள்ள தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு ‘வாக்கி டாக்கி’

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க, பொறுப்பு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு, ‘வாக்கி டாக்கி’ வழங்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழைக் காலங்களில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகம் பாதிக்கப்படுவது வழக்கம்.

இதற்குத் தீர்வு காணும் வகையில், முந்தைய தி.மு.க., ஆட்சியில், 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டன.

த.வெ.க., அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடர்கின்றன.

மெட்ரோ ரயில் பணிகளால் சாலைகள் சேதமடைந்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழையும், கடந்த 15ம் தேதி தொடங்கியுள்ளதால், சாலைகளின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது.

பிரதான சாலைகளில் மழைநீர் கால்வாய் பணிகளுக்காக தோண்டப்படுவதால், மாற்றுச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பயண நேரம், எரிபொருள் செலவு அதிகரிப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால், வெள்ளம் தேங்கும் இடங்களில், உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள, சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அனைத்து மண்டலங்களையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொறுப்பு அமைச்சர்கள், த.வெ.க., – எம்.எல்.ஏ.,க்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில், ‘வாக்கி டாக்கி’ வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் அளிக்கும் தகவல்களை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்து, பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க உள்ளனர்.

Advertisement