குடியிருப்புகள் அருகே சிறுத்தை கூண்டு வைக்க மக்கள் வலியுறுத்தல்
பந்தலுார்: பந்தலுார் அருகே, மேங்கோரேஞ்ச் தேயிலை தொழிற்சாலை, ரேசன் கடை மற்றும் தொழிலாளர்கள் குடியிருப்புகளை ஒட்டி கேரளா மாநிலம் செல்லும் நெடுஞ்சாலை அதனை ஒட்டி குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.
இந்த பகுதியில் தேயிலை தோட்டத்திற்கு மத்தியில் செல்லும் சாலையில் இரவு சிறுத்தை ஒன்று படுத்திருப்பதை இந்த வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். நீண்ட நேரம் படுத்திருந்த சிறுத்தை மெதுவாக தோட்டப் பகுதிக்குள் சென்றது.
இதுகுறித்து கவுன்சிலர் ரமேஷ் கூறுகையில், ‘‘ இப்பகுதியில் நாள்தோறும் சிறுத்தைகள் நடமாடி வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டு அடிக்கடி வரும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு வலியுறுத்தியும், கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே, வனத்துறையினர் இப்பகுதியில், கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.