அமராவதி ராஜவாய்க்காலில் மாசு: மாவட்டத்தில் விவசாய நிலம் பாதிப்பு

கரூர்:அமராவதி ராஜவாய்க்காலில் பிளஸ்டிக், கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழனிமலை மற்றும் ஆனைமலை குன்றுகளுக்கு இடையே மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகும் அமராவதி ஆறு, கரூர், திருப்பூர் மாவட்டங்களின் பாசன நிலங்களை வளப்படுத்தி, திருமுக்கூடலுார் வழியாக காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இதனிடையே, கரூர் அடுத்த செட்டிப்பாளையம் பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து பிரியும் அமராவதி ராஜவாய்க்கால் தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது.
சுக்காலியூர், தோரணக்கல்பட்டி, அப்பிப்பாளையம், கருப்பம்பாளையம், ராயனுார் உள்ளிட்ட பகுதிகளில் இய ங்கி வரும் சாய மற்றும் சலவை ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், இரவு நேரங்களில் இந்த வாய்க்காலில் திறக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கரையோர குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், பிளஸ்டிக் குப்பைகளும் வாய்க்காலில் தேங்குவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதுகுறித்து அமராவதி ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் கூறியதாவது: இங்குள்ள அமராவதி வாய்க்கால் மூலம், 4,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. முன், இப்பகுதி செழிப்பாக இருந்த நிலையில், தற்போது ஆலை கழிவுகளால் நிலங்கள் உப்புத்தன்மை அடைந்து வருகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அமராவதி ராஜவாய்க்காலை உடனடியாக துார்வார வேண்டும். மேலும், ராஜவாய்க்காலில் கழிவுநீரை கலப்பவர்கள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement