மதுக்கடையை மாற்றம் செய்ய முற்றுகை போராட்டம்

மானாமதுரை: மானாமதுரை வளநாடு விலக்கு ரோடு அருகே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மானாமதுரை அருகே மதுரை,ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் வளநாடு விலக்கு ரோடு அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு அருகில் கோயில்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இவ்வழியாக பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். இக்கடையை இடமாற்றம் செய்ய ஒரு வருடத்திற்கும் மேலாக மக்கள் போராடி வருகின்றனர். 3 மாதங்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தின் போது அதிகாரிகள் 3 மாதத்திற்குள் கடை இடமாற்றம் செய்யப்படும் உறுதி அளித்தனர். கடையை மாற்றாததால் நேற்று காலை 11:00 மணிக்கு அப்பகுதி பெண்கள் கடையை திறக்க முடியாதவாறு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

டி.எஸ்.பி., லோகநாதன், டாஸ்மாக் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி தீபாவளி பண்டிகை முடிந்து 3 நாட்களுக்குள் கண்டிப்பாக கடை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement