மழைக்கு முன் சீரமைக்காமல் விடப்பட்ட சாலைகள்: காஞ்சி மாநகராட்சி அலட்சியத்தால் வாகன ஓட்டிகள் அவதி

காஞ்சிபுரம்: குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை, வடகிழக்கு பருவமழைக்கு முன், காஞ்சிபுரம் மாநகராட்சி சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகளில் 1,000த்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.

இங்குள்ள பல்வேறு சாலைகள் ஏற்கனவே சேதமடைந்துள்ள நிலையில், 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தொடர்ந்து சாலைகள் தோண்டப்படுகின்றன.

நடவடிக்கை





பணிகள் முடிந்ததும் சாலைகள் முறையாக சீரமைக்கப்படுவதில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன், சாலைகளை சீரமைக்கப்படும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், மழை பெய்யும்போது, பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால், அதன் ஆழம் தெரியாமல், வான ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர்.

இந்த சாலைகள் தற்போது, வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளன.

சாலைகளின் மோசமான நிலை குறித்து, மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

பாதிப்பு





நகரின் பல பகுதிகளில் சாலைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், அன்றாடம் வேலைக்கு செல்வோர், பள்ளி மாணவ – மாணவியர், வணிகர்கள் என, அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, மழை தீவிரம் அடையும் முன், பள்ளங்களை துார்த்து, சாலைகளை சீரமைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement