சந்தைக்கு தக்காளி வரத்து குறைவு: விலையும் அதிகரிப்பு

உடுமலை: வரத்து குறைவால், உடுமலை சந்தையில் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. விலை நிலையாக இருக்க, பிற மாநில வரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை சந்தை தக்காளி வர்த்தகத்தின் முக்கிய மையமாக உள்ளது. சுற்றுப்பகுதிகளில் பிரதானமாக தக்காளி சாகுபடி செய்யப்படுவதால், ஆண்டு முழுவதும் சந்தைக்கு வரத்து இருக்கும்.

கேரளம் மாநிலம் மூணாறு, மறையூர் மற்றும் பல்வேறு மாவட்ட வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.

வழக்கமாக, உடுமலை சந்தைக்கு, 70 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வரை வரத்து காணப்படும். உள்ளூர் வரத்து பாதிக்கும் போது, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் தக்காளி உடுமலை சந்தைக்கு வரவழைக்கப்பட்டு, பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

தற்போது உடுமலை சுற்றுப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கியுள்ளதால், சாகுபடியில் பூ உதிர்தல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு, உற்பத்தி குறைந்துள்ளது. சந்தைக்கும் வரத்து பாதித்து, விலை அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம், 14 கிலோ கொண்ட, ஒரு பெட்டி, ரூ.200 வரை விற்றது. நேற்று, 14 கிலோ கொண்ட பெட்டி, 450 ரூபாய்க்கு விற்பனையானது.

விவசாயிகள் கூறுகையில், ‘நீண்ட இடைவெளிக்குப்பிறகு தக்காளிக்கு நிலையான விலை கிடைக்கிறது. தற்போது நடவுப்பணிகள் அதிகளவு பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே விரைவில், தக்காளி விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தருணத்தில் பிற மாநிலங்களில் இருந்து அதிகளவு தக்காளி பெறப்படும் போது, உள்ளூர் தக்காளிக்கு விலை கிடைப்பதில்லை. பிற மாநில வரத்தை கட்டுப்படுத்தி, நிலையான விலை கிடைக்க அரசு உதவ வேண்டும்,’ என்றனர்.

Advertisement