‘ஆண்டாளும் அவளது பாசுர மாலையும்’ மக்களை ‘கட்டிப்போட்ட’ நாட்டிய நாடகம்

திருப்பூர்: திருப்பூர் சாய் கிருஷ்ணா நுண்கலைக் கூடத்தின், 18ம் ஆண்டு விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, திருப்பூர், ஹார்வி குமாரசாமி திருமண மண்டப வளாகத்தில், பிரமாண்ட நாட்டிய நாடகம் நடந்தது.

‘வில்லிபுத்துார் திருமகள் – ஆண்டாளும், அவரது பாசுர மாலையும்’ என்ற தலைப்பில் நடந்த நாட்டிய நாடகம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. ஸ்ரீ வில்லிபுத்துாரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை ஆண்டாளின் தெய்வீக பயணத்தை உயிரோட்டத்துடன் கண்முன் நிறுத்திய இப்படைப்பு, பக்தியையும், கலையையும், ஆன்மிக பெருமையையும் ஒருங்கே இணைத்த ஓர் அற்புதமான நிகழ்வாக இருந்தது.

இதில், ஆறு வயது முதல், 40 வயது வரலையிலான, 125 கலைஞர்கள் பங்கேற்றனர். நாடகம், ஆண்டாளின் திருப்பாவை, காலத்தால் அழியாத பெருமையையும் பக்தி சிறப்பையும் பறைசாற்றியது. இதில், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரின் தெய்வீக அறிமுகத்துடன் துவங்கிய நிகழ்ச்சி, தொடர்ந்து வராஹ அவதாரத்தின் மகத்துவத்தையும் எடுத்துரைத்தது. பின், பெருமாளின் திருவருளால் பூதேவி ஆண்டாளாக அவதரிக்கும் நிகழ்வு அழகாக அறங்கேற்றப்பட்டது. வைணவ மரபில், போற்றப்படும் பெண் ஆழ்வாரான ஆண்டாளின் அவதார பெருமையை எடுத்துரைக்கும் வகையில் இக்காட்சி அமைந்தது.

திருப்பாவையின், 30 பாசுரங்களும் நாட்டிய வடிவில் அரங்கேற்றப்பட்டது. ஆண்டாளின் ஒவ்வொரு பாசுரத்திலும் பொதிந்துள்ள ஆன்மிக ஆழத்தையும், கவிதை நயத்தையும் பக்தி பெருக்கையும் நடனத்தின் வாயிலாக வெளிப்படுத்திய இந்த முயற்சி, கலை உலகில் குறிப்பிடத்தக்க சாதனையாக திகழ்ந்தது. மேலும், நிகழ்ச்சி நடக்கும் போது மழை வந்தது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நாடகம் நடந்தது. மழையையும் பொருட்படுத்தாமல், நிகழ்ச்சி நிறைவடையும் வரை பார்வையாளர்கள் பார்த்து பிரமித்ததாக, சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட முதன்மை நிர்வாகி, டாக்டர் சந்தியா சங்கர் தெரிவித்தார்.

Advertisement