சத்திரம் விமான தளம் பணிகள் மீண்டும் துவங்க வாய்ப்பு: வனத்துறை நிலம் வழங்கியதால் தடை விலகியது

மூணாறு: இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே சத்திரம் விமான தளத்திற்கு வனத்துறையினர் ஏழு ஏக்கர் நிலம் வழங்க சம்மதித்து அப்பணிகளை பூர்த்தி செய்தனர்.

சத்திரத்தில் தேசிய மாணவர் படையினர் விமான பயிற்சி பெறவும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவும் விமான தளம் அமைக்கப்பட்டது. 650 மீட்டர் நீளத்தில் ஓடுதளம், நான்கு சிறிய விமானங்கள் நிறுத்தவதற்கு இடவசதி, 50 மாணவர்கள் தங்குவதற்கு விடுதி உள்பட பல்வேறு பணிகள் நிறைவு பெற்றன. அங்கு 2022 டிச.1ல் தேசிய மாணவர் படையின் இரண்டு இருக்கைகளைக் கொண்ட வைரஸ் எஸ்.டபிள்யூ., 80 ரக விமானம், 2023 செப்.23ல் விமானபடைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஆகியவை தரையிறக்கப்பட்டு ஆய்வு நடந்தது.

இதனிடையே 2022 ஜூலையில் பெய்த மழையில் ஓடு தளத்தின் ஓரப் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கு அருகில் விமான தளம் உள்ளதால், ஓடு தளத்தை சீரமைக்கவும், பாதுகாப்பு சுவர் கட்ட கூடுதல் நிலம் வழங்கவும் வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சீரமைப்பு பணிகள் முடங்கின.

தற்போது அப்பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. விமானதள பணிகளுக்கு 7.20 ஏக்கர் நிலம் வழங்க முன் வந்த வனத்துறையினர், நிலத்தை அளந்து முறைபடுத்தும் பணிகளை பூர்த்தி செய்தனர். அதற்கு பதில் வனத்துறையினருக்கு வாகமண்ணில் நிலம் வழங்க வருவாய்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நிலம் தொடர்பான பிரச்னை முடிவுக்கு வந்ததால், முடங்கிய விமான தளம் கட்டுமான பணிகள் மீணடும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement