வால்பாறை மலைப்பாதையில் மண் சரிவு: 16 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை: வால்பாறை செல்லும் மலைப்பாதையில், மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டதால், 16 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், வால்பாறை மலைப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை காற்றுடன் மழை பெய்தது. அப்போது, இரண்டாவது கொண்டைஊசி வளைவு அருகே இரவு, 8:00 மணிக்கு மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்தன. இதனால், ரோடு சேதமடைந்ததோடு, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வால்பாறைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ஆழியாறு சோதனைச்சாவடியிலும், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள் அட்டகட்டி சோதனை சாவடியிலும் நிறுத்தப்பட்டன.

இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகன்குமார், உதவி செயற்பொறியாளர் பிரதீப் ஆகியோர் தலைமையில், நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம், தொடர் மழை, வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதி என்பதால் பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின், அதிகாலை பாறைகளை அகற்ற தேவையான இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, பாறைகளை அகற்றும் பணி துவங்கியது. பொள்ளாச்சி சப்– கலெக்டர் ராமகிருஷ்ணசாமி சம்பவ இடத்திற்கு சென்று, மீட்பு பணிகளை ஆய்வு செய்தார்.

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு பால், ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதே போல் பல்வேறு பகுதியிலிருந்து வால்பாறைக்கு வந்தவர்கள், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல், இரவு முழுவதும் உணவு மற்றும் தண்ணீர் கூட கிடைக்காமல் மலைப்பாதையில் தவித்தனர். தகவல் அறிந்த வால்பாறை நகராட்சி கமிஷனர் வெங்கடலட்சுமணன் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள், சுற்றுலா பயணியருக்கு காலை நேர உணவு வழங்கினர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் முயற்சியால் நேற்று காலை, 11:30 மணிக்கு ரோடு சீரமைப்பு பணி நிறைவடைந்தது. அதன்பின், இருசக்கர, இலகு ரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, பஸ்கள் அனுமதிக்கப்பட்டன. 16 மணி நேரத்திற்குபின் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.

@block_B@

கனரக வாகனங்களுக்கு தடை



வால்பாறையில் இருந்து ஆழியாறு செல்ல மாற்றுவழிப்பாதை இல்லை. இந்நிலையில், மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் பாறைகள் ரோட்டில் விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்பு, முழுமையாக சரி செய்யப்படவில்லை.

மீண்டும் மண் சரிவு ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது. எனவே ரோடு சீரமைப்பு பணி முழுமையாக முடியும் வரை, ஆழியாறில் இருந்து வால்பாறைக்கு, சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.block_B

Advertisement