காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

நாமக்கல்:தமிழகத்தில், ஆண்டுதோறும் அக்., 21ல், காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், பணியின்போது உயிரிழந்த, 154 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆண்டுதோறும், அக்., 21ல், 'காவலர் வீரவணக்க நாள்' அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, கடந்த ஓராண்டில் பணியின்போது வீரமரணம் அடைந்த காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில், நேற்று காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல் கலெக்டர் மதுபாலன், எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக் ஆகியோர் பங்கேற்று, பணியின்போது இன்னுயிர் நீத்த காவல்துறையினருக்கு, மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, இறந்த காவலர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது.
மேலும், ஜேடர்பாளையம், கொத்தமங்கலத்தில் கடந்த, ஏப்., 9ல், தேர்தல் பணிக்காக செல்லும்போது, விபத்தில் இறந்த ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த காவலர் பிரவீன் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.
கூடுதல் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் உள்பட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Advertisement