தொடர் மின்வெட்டால் விவசாயம் பாதிப்பு ; விவசாயிகள் கவலை
காரைக்குடி: சாக்கோட்டை வட்டாரத்தில் தொடர் மின்வெட்டால் விவசாயம் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை வட்டாரத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மானாவாரி மற்றும் போர்வெல் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. வட்டாரத்தில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது மழையை நம்பி சாக்கோட்டை, கல்லல் உட்பட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளனர். போதிய மழை இல்லாததால் பயிர்கள் காய்ந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சாக்கோட்டை அருகே உள்ள சிறுகப்பட்டி ஊராட்சி, எசலிவயல் உட்பட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலும் போர்வெல் மற்றும் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. உழவு, உரம், விதைநெல் என ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். விவசாயிகள் செயற்கை உரம் இல்லாத, இயற்கை விவசாயத்திலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், தொடர் மின்வெட்டு காரணமாக விவசாயப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எசலிவயல் விவசாயி கருப்பையா கூறுகையில்;
தற்போது இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். தூயமல்லி, ஆத்தூர் கிச்சடி, கருப்புக் கவனி உள்ளிட்ட இயற்கை நெல் வகைகளை பயிரிட்டு தற்போது நாற்று பறித்து, நெல் விதைப்பில் ஈடுபட உள்ளோம். பெரும்பாலான பகுதிகளில் மழை இல்லாமல் பயிர்கள் காய்ந்து கிடக்கிறது. இப்பகுதியில் 14 கிணறுகள் மூலம் விவசாயப் பணிகள் நடந்து வருகிறது. போதிய டிரான்ஸ்பார்ம் இல்லாததால் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுகிறது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாய பணியில் தொய்வு ஏற்படுகிறது. விவசாய பணிகளுக்கே ஆட்கள் கிடைக்காத நிலையிலும், அதிக கூலி காரணமாக விவசாயத்தை பலரும் கைவிடும் நிலையிலும், மின்வெட்டு தற்போது பெரும் சவாலாக உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.