சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
வால்பாறை: வால்பாறை அருகே, சாலையில் கடந்த நகை மற்றும் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த தனியார் எஸ்டேட் மேலாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் மேலாளராக பணிபுரியாற்றுபவர் நிரஞ்சன். இவர் சிறுகுன்றா ரோட்டில் வாகனத்தில் சென்ற போது, ரோட்டில் பேக் ஒன்று கிடந்தது. அதில், ஒருபவுன் தங்க நகை மற்றும் பணம் 70,000 ஆயிரம் ரூபாய் இருந்தது. உடனடியாக வால்பாறை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, பணம், நகையுடன் பேக்கை ஒப்படைத்தார்.
அப்போது, நகை, பணத்துடன் பேக் தவறி விட்டதாக, சிறுகுன்றா எஸ்டேட்டை சேர்ந்த தொழிலாளி ஜமுனாராணி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். பேக்கில் இருந்த அவரது ஆவணங்களை சரிபார்த்த போலீசார், விசாரணைக்கு பின், பணம் மற்றும் நகையை ஒப்படைத்தார். எஸ்டேட் மேலாளர் நிரஞ்சனின் நேர்மையை பாராட்டி போலீசார் அவருக்கு சால்வை அணிவித்தனர்.