த.வெ.க., ஆட்சியில் லஞ்சம், ஊழல் குறைந்துள்ளது அதிகாரிகள் அச்சத்துடன் வேலை செய்கின்றனர்: சொல்கிறார் சிதம்பரம்
காரைக்குடி: த.வெ.க., ஆட்சியில் லஞ்சம், ஊழல் கணிசமாக குறைந்துள்ளதோடு, அதிகாரிகள் பயத்திலேயே வேலை செய்கிறார்கள், என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடியில் அவரளித்த பேட்டி:
தமிழகத்தில் மட்டுமல்ல; நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. தற்போது மொத்த பணவீக்கம் 11.5 சதவீதமாகவும், சில்லறை பணவீக்கம் 5.5 சதவீதமாகவும், உணவுப்பொருள் பணவீக்கம் 10.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இதற்கு மத்திய அரசின் நிதி பற்றாக்குறை, கடன் வாங்குவது, நாணய மதிப்பு குறைவது மற்றும் போர், போக்குவரத்து சிக்கல் போன்ற உலகளாவிய நெருக்கடிகளே காரணம்.
தமிழக அரசால் நிதி பற்றாக்குறை அனைத்தையும் சரி செய்ய முடியாது. அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு தரலாம்.
தினக்கூலி மற்றும் தொழிலாளர்களின் ஊதியம் தேக்கமடைந்துள்ளதால் குடும்பங்களின் கடன் சுமை 40–50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. காங்., அழுத்தம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக தேர்தல் கமிஷன் தனது நிலைப்பாட்டில் இருந்து பல்டி அடித்து எஞ்சிய மாநிலங்களுக்கு எஸ்.ஐ.ஆர்., கிடையாது என அறிவித்துள்ளது.
த.வெ.க., ஆட்சியில் லஞ்சம், ஊழல் கணிசமாக குறைந்துள்ளது. பத்திரப்பதிவுத்துறை, போக்குவரத்துத் துறை, மின்துறையில் லஞ்சம் குறைந்துள்ளது. அதிகாரிகள் ஒரு பயத்திலேயே வேலை பார்க்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தான் சிறந்தது. மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் நிதி கமிஷனுடைய நிதியை மத்திய அரசு தராது. இவ்வாறு கூறினார்.