வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணி: கலெக்டர் பத்மஜா அழைப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்–2027 மற்றும் ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு பணிகளை பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பயன்படுத்தி கொள்ள கலெக்டர் பத்மஜா அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2027ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி வரும் நவம்பர் 2ம் தேதி ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு மற்றும் அமைவிடங்கள் சரிபார்த்தல், 12ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. அன்று முதல் டிசம்பர் 11ம் தேதி வரை மனுக்கள், உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபணை தாக்கல் செய்யும் காலம். டிசம்பர் 28ம் தேதி மனுக்கள் மீது தீர்வு காணுதல். 2027 ஜனவரி 4ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு பணி பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதனையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. ஒரு ஓட்டுச் சாவடியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,200க்கு மிகாமல் இருக்கும் வகையில் புதிய ஓட்டுச்சாவடிகள் அமைப்பது மற்றும் பிரிப்பது தொடர்பான ஆய்வு செய்யப்படுகிறது.
புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கு, வரும் ஜனவரி 1ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடையும் நபர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத தகுதியுள்ள அனைவரும் படிவம் 6–ல் விண்ணப்பிக்கலாம். மேலும், அடுத்தடுத்த காலாண்டுகளான ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1ம் தேதிகளில் 18 வயது நிறைவடைய உள்ள இளம் வாக்காளர்களும் தங்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே அளிக்கலாம்.
படிவம் 6ஏ மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்காளராக பதிவு செய்யலாம். படிவம் 7 மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் மற்றும் ஆட்சேபணை தெரிவிக்கலாம்.
படிவம் 8ஐ தொகுதிக்குள் அல்லது வேறு தொகுதிக்கு முகவரி மாற்றம், பெயர் விபரங்கள் திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை பெறுதல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பதிவு செய்தல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம்.
வாக்காளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் voters.eci.gov.in அல்லது 'Voter Helpline App' என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வரும் நவம்பர் 12 ம் தேதி முதல் டிசம்பர் 11 ம் தேதி வரை அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். பொதுமக்கள், இளம் தலைமுறையினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
வலுவான இந்தியாவை கட்டியெழுப்ப இளைஞர் சக்தியை வளர்க்க வேண்டும்; பிரதமர் மோடி
-
டிரம்ப் மருமகன் வங்கிக்கணக்கிற்கு ரகசியமாக வந்த பணம்: நெதர்லாந்து உளவு அமைப்பு பகீர் குற்றச்சாட்டு
-
சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யாத அரசுக்கு அறிவுரை கூற தகுதி கிடையாது; பாகிஸ்தானுக்கு இந்தியா பதில்
-
ராகுலுக்கு அரசியல் ஞானம் இல்லை; பாஜ விமர்சனம்
-
கல்லுாரியில் ரத்ததான முகாம்
-
கார் மரத்தில் மோதி பலி 1 : காயம் 3