போலீசின் அறிவுரையால் மக்கள் நெகிழ்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரி, இந்திரா சிக்னல் வழியாக இன்று (அக்.,22) காலை மழையில் பொதுமக்கள் அனைவரும் தங்களது அன்றாடப் பணிகளைத் தொடர அவசரமாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த மழையின் குளிர்ச்சியைக் காட்டிலும், அங்கு பணியில் இருந்த ஐ.ஆர்.பி.என். உதவி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுவின் வார்த்தைகள் பொதுமக்களின் மனதை ஆழமாக ஈர்த்தன.
அதில், போலீஸ்னா அபராதம் போடுவாங்கனு தானே நினைக்கிறீங்க, ஆனா நாங்க உங்க நலன்ல தான் அதிக அக்கறை வச்சிருக்கோம்.
ஹெல்மெட் போடுறதை செக் பண்றது மட்டும் எங்க வேலையில்லை. உங்களோட பாதுகாப்பு மற்றும் நலனைப் பார்ப்பதும் எங்க பொறுப்புதான். மழைக்காலம் தொடங்குவதால், வாகன ஓட்டிகள் அனைவரும் மெதுவாகவும், கவனமாகவும் செல்ல வேண்டும். மழைக்கு தேவையான ரெயின் கோட் மற்றும் அத்தியாவசிய பொருட்களை எப்போதும் வாகனத்தில் கைவசம் வைத்திருக்க வேண்டும். அவசரத்தை விட உங்க உயிரும் பாதுகாப்பும் தான் முக்கியம்.
சாதாரணமாக போக்குவரத்து போலீஸ் என்றாலே வாகன சோதனையும், அபராதமும் தான் நினைவுக்கு வரும். ஆனால், அதற்கு மாறாக ஒரு போலீஸ் மக்களின் பாதுகாப்பைத் தன் சொந்த குடும்ப உறுப்பினரைப் போல அக்கறையுடன் நினைத்து வழங்கிய இந்த அறிவுரை, சிக்னலில் நின்றிருந்த வாகன ஓட்டிகளுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.