பேரிடரில் முதலுதவி அளிப்பது எப்படி மீட்பு குழுவினர் செயல் விளக்கம்
பந்தலுார்: பேரிடரின் போது முதலுதவி அளிப்பது குறித்து, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் செயல் விளக்கம் அளித்தனர்.
தேசிய பேரிடர் மீட்பு குழுவின் அரக்கோணம் 4-வது பட்டாலியன் சார்பில், பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளின் போது முதலுதவி அளிப்பது குறித்த செயல் விளக்கம் பந்தலுாரில் நடந்தது. மீட்பு குழு இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமை வகித்தார். தாசில்தார் துரைசாமி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, பேரிடர் மீட்பு குழு பயிற்சியாளர் ஜெயகுணம், ‘பேரிடரில் சிக்கி பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றுவது; தீ மற்றும் தண்ணீரில் சிக்கி கொண்டவர்களை காப்பாற்றும் வழிமுறைகள்; சிகிச்சை குறித்து செயல் விளக்கத்துடன், பயிற்சி அளித்தார்.
தொடர்ந்து, பருவமழையின் போது அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தும் சேரம்பாடி நெல்லிக்குன்னு, நெலாக்கோட்டை அருகே கூவச்சோலை ஆகிய பகுதிகளை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்துராஜ் முன்னிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். பயிற்சியின் போது, வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.