பருவமழை முன்னெச்சரிக்கை திருநெல்வேலி மாவட்டம் 5 மண்டலங்களாகப் பிரிப்பு 71 வெள்ளப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு

திருநெல்வேலி: வடகிழக்குப்பருவமழையை முன்னிட்டு வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க திருநெல்வேலி மாவட்டம் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு அதிகாரி தலைமையில் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப்பணிகள் எடுக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சன், கலெக்டர் ஆனந்த் மோகன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் திருநெல்வேலி சந்திப்புபகுதியில் வெள்ளப்பாதிப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகள், வேய்ந்தான்குளம் துார்வாரும் பணி, குலவணிகர்புரம் ஒய் வடிவப் பாலம் அமைக்கும் பணி ஆகியவற்றை நேற்று ஆய்வு செய்தார்.

பின் அமைச்சர் கூறியதாவது :

முதல்வர் விஜய் அறிவுறுத்தலின்படி மழைக்காலத்தில் பொதுமக்கள், குழந்தைகள், விவசாயிகள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

திருநெல்வேலி மாவட்டம் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சிக்கு மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா, பாளையங்கோட்டை ஊரகப்பகுதிகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் பிரியா, ராதாபுரத்துக்கு கூடுதல் கலெக்டர் விஜய்குமார் மீனா, நாங்குநேரிக்கு சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஷ் குப்தா, திசையன்விளைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய 71 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2023ல் பதிவான அதிகபட்ச மழையளவைவிட கூடுதல் மழை பெய்தாலும் எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவ 466 தன்னார்வலர்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய பயிற்சிகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 'வணக்கம் திருநெல்வேலி' சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் மாற்று ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் மழைநீர் சீராகச் செல்ல 53 கி.மீ., துாரத்திற்கு துார்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்றார்.

மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் வித்யா, வருவாய் கோட்டாட்சியர் பிரியா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

Advertisement