இடுக்கியில் 3 நாட்கள் ஆரஞ்ச் அலர்ட்; இரவு பயணம், சுற்றுலாக்களுக்கு தடை

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் நாளை (அக்., 23) முதல் மூன்று நாட்களுக்கு கன மழைக்கான' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கலெக்டர் தினேசன் செருவாட் உத்தரவிட்டார்.

மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை 47 சதவீதம் குறைந்ததால், வட கிழக்கு பருவ மழை கை கொடுக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. இரு நாட்களாக மழை பெய்த நிலையில், அக்., 23, 24, 25 வரை கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' முன்னெச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. அதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கலெக்டர் தினேசன் செருவாட் உத்தரவிட்டார்.

கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கன மழையால் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அது போன்ற பகுதிகளில் வசிப்பவர்களை அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதுடன், நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும்.

மலை பகுதிகளில் இரவு 7:00 முதல் காலை 6:00 மணி வரை பயணம், நீர்நிலைகளில் படகு சவாரி, கயாக்கிங் உட்பட பொழுது போக்கு அம்சங்கள், டிரக்கிங், ஜீப் சவாரி உட்பட சாகச சுற்றுலா ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. மலை பாதைகளில் முடிந்த வரை வாகன போக்குவரத்தை தவிர்க்க வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளனர், என கூறியுள்ளார்.

Advertisement