இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் விமானி ஸ்மிட் உடன் பங்கேற்க பிரதமருக்கு நெதன்யாகு அழைப்பு
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் இன்று (அக்.,22) பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்கள் நாட்டு சுதந்திர தின விழாவில், இஸ்ரேலியர்கள் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மிட் மச்சார் உடன் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தார்.
கடந்த செப்., 30ல் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் புறப்பட்ட, ‘ப்ளை துபாய்’ விமானத்தை கடத்தும் முயற்சி நடந்தது. துணை விமானியான ஓமனைச் சேர்ந்த ஹமாம் அல் ஹமாமி, இந்தியரான விமான கேப்டன் ஸ்மிட் மச்சாரை தாக்கி விமானத்தை கட்டுப்பாட்டில் எடுக்க முயன்றார்.
அவருடன் போராடி விமானி அறை கதவை திறந்து பயணியர் உதவியுடன் அவரை கட்டுப்படுத்தினார். இதன் காரணமாக 174 பயணியர் உயிர் தப்பினர். அவர்களில் பெரும்பாலானோர் இஸ்ரேலியர்கள்.
விமான கேப்டனின் வீர தீர செயலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அப்போதே பாராட்டி, சுதந்திர தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இந்நிலையில், பிரதமர் மோடியுடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் இன்று பேசினார்.
அப்போது, இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் இந்திய விமானி மச்சாருடன் இணைந்து பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.
இஸ்ரேல் சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாம் வாரத்தில் கொண்டாடப்படும். அதன் தொடக்க விழா ஏப்ரல் 30ல் ஆரம்பிக்கும்.