மின் மயானம் அமைக்க எதிர்ப்பு வேப்பம்பட்டில் சாலை மறியல்

செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டையில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, வேப்பம்பட்டு மக்கள் இன்று (அக்.,22) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அடுத்துள்ளது, வேப்பம்பட்டு ஊராட்சி. இங்கு, குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், மின் மயானம் அமைக்க, அரசு உத்தரவுப்படி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.

குடியிருப்பு பகுதி அருகே மின் மயானம் வருவதால், சடலங்களை எரிக்கும் போது எழும் புகையால், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட அபாயம் உள்ளதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று சென்னை – திருத்தணி – ரேணிகுண்டா நெடுஞ்சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டோரிடம் சமரச பேச்சு நடத்தினர். அப்போது, பொதுமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் வரவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

அதன்பின், திருவள்ளூர் சப் – கலெக்டர் பிரசாந்த் சம்பவ இடத்திற்கு சென்று, மக்களிடம் பேச்சு நடத்தினார்.

அப்போது, சப் கலெக்டர் பிரசாந்த் கூறியதாவது:

கடந்த 2024ல் நடந்த கிராம சபை கூட்டத்தில், மின் மயானம் அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு உத்தரவுப்படி மின் மயானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இதுகுறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும்.

அரசு தான், மின் மயானம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.

Advertisement