ரூ.5 லட்சம் லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரை கைது செய்தது சிபிஐ
லக்னோ: வழக்கினை சாதகமாக முடித்துத் தருவதாகக் கூறி, ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
சம்மன் அனுப்பி மிரட்டல்:
உ.பி., மாநிலம் லக்னோவில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் தீபக் குமார் என்பவர் அமலாக்கத்துறை அதிகாரியாகவும், மனோஜ் துவிவேதி என்பவர் தலைமை காவலராகவும் பணியாற்றி வருகின்றனர்.
அங்கு வழக்கு ஒன்றில், புகார் அளித்த நபரின் தந்தைக்கு கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அமலாக்கத்துறை சார்பில் இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவும், அவருக்கு சாதகமாக செயல்படவும், அமலாக்கத்துறை அதிகாரி தீபக் குமார் சார்பில் தலைமை காவலர் மனோஜ் துவிவேதி ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டு பேரம் பேசியுள்ளார்.
பொறி வைத்து பிடித்த சிபிஐ.:
லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து சி.பி.ஐ., அதிகாரிகளிடம் புகார் அளித்தார். லக்னோவில், தீபக் குமாருக்காக, தலைமை காவலர் மனோஜ் துவிவேதி ரூ.5 லட்சம் லஞ்சப் பணத்தை வாங்கியபோது மறைந்திருந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அவரை கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் மனோஜ் துவிவேதி மற்றும் லஞ்சம் பெற உடந்தையாக இருந்த அமலாக்கத்துறை அதிகாரி தீபக் குமார் ஆகிய இருவரையும் சி.பி.ஐ., அதிரடியாக கைது செய்தனர்.
எல்லா இடத்திலும் கறுப்பு ஆடுகள் உள்ளன