தமிழக வீரர் நவீன் சிவகுமாருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை; முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை: பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீரர் நவீன் சிவகுமாருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

அவரது அறிக்கை: ஜப்பானில் நடந்து வரும் 5வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் நவீன் சிவகுமாருக்கும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீக்கும், டேபிள் டென்னிஸ் விளையாட்டில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெஹான் டொரப் மதனுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகத்தான சாதனைகளைப் பாராட்டும் வகையில், தமிழக அரசின் சார்பில் வீரர் நவீன் சிவகுமாருக்கு ரூ.75 லட்சமும், வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் மற்றும் நித்ய ஸ்ரீ ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சமும், வீரர் ஜெஹான் டொரப் மதனுக்கு ரூ.30 லட்சமும் உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்படும். நமது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் சாதனைகளை படைத்துள்ளதோடு, தமிழகத்தின் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்துள்ளனர்.

தொடர்ந்து உயர்ந்த இலக்குகளை நோக்கிப் பயணித்து, சர்வதேச அரங்கில் பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

Advertisement